சென்னையில், செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லோகநாதனுக்கு கரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வந்தது. இதையடுத்து அவர் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், அன்றிரவு திடீரென லோகநாதனுக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டதால், அவர் அடுத்த இரண்டு நாள்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து சென்னையிலிருந்து இன்று ( செப்.17 ) காலை வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
இன்று(17.09.2020) மாலை வெளியாகிய கரோனா பரிசோதனை முடிவில் எம்.எல்.ஏ லோகநாதனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அதே மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைக்கு உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : காங்கிரஸ் எம்எல்ஏ கோவர்தன் டாங்கி கரோனாவால் உயிரிழப்பு!