வேலூர்: யூ 2 புரூட்டஸ் (U2Brutus) என்ற யூட்யூப் சேனலில் சில தினங்களுக்கு முன்பு இந்துக்களின் முதன்மை கடவுளாகப் போற்றி வணங்கப்படும் சிவபெருமான் குறித்து 'சிதம்பரம் நடராஜர் காலை ஏன் தூக்கி வைத்திருக்கிறார்' என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், சிதம்பரம் நடராஜர் பெருமானை மிகவும் தவறான வகையில் விமர்சித்து காணொலி வெளியிட்டதாக அந்த யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாட்டில் ஆங்காங்கே இந்து முன்னணியினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, தென்காசியில் இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று (மே.02) கருப்பசாமி வேடம் அணிந்து பஞ்ச வாத்தியங்களோடும் சங்கொலி எழுப்பியும் நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதேபோல, வேலூரில் இன்று இந்து முன்னணியின் சார்பில் கோட்டத்தலைவர் மகேஷ் தலைமையில் இந்து முன்னணியினர், சிவன் வேடம் அணிந்து சென்று சிதம்பரம் நடராஜர் மீது அவதூறாகப் பேசியதற்கு சட்டபடி அவர் மீது வழக்குபதிவு செய்து மைனர் விஜய் என்பவரை தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்ய கோரியும்; அவதூறை பரப்பும் யூ2புரூட்டஸ் யூ-ட்யூப் சேனலை தடைவிதிக்க கோரியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீண்டாமை? தீட்சிதர்கள் மீது வழக்கு