வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சிந்தக் கணவாய் கிராமத்தில் ஸ்ரீ கங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊர் பொதுகோயிலான இங்கு கமலாபுரம், கவரப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 165 குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்த கோயிலை ஆக்கிரமித்து கொண்டு, பட்டியலின மக்கள் மக்களை கோயிலுக்குள் வரக்கூடாது என்றும், வழிபட விடாமல் பிரச்னை செய்து வந்துள்ளனர்.
சாதி ரீதியான ஒதுக்குதலை கண்டித்து பட்டியலினத்தை சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர். இவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். பல்லாண்டுகளாக தொடரும் சாதியக் கொடுமைக்கு பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல், இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல காவலர்கள், அவர்களை அனுமதித்தனர். பின்னர் சாதிய கொடுமை குறித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுவாக அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.