வேலூர் மாவட்டம் தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியான பொன்னை அடுத்த எஸ்.என். பாளையத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஆட்கள் யாருமின்றி கார் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பொன்னை காவல் நிலையத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சேற்றில் சிக்கியிருந்த அந்த காரை மீட்டு ஆய்வு செய்தனர். அப்போது காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் செம்மரக்கட்டை ஒன்றையும், வீச்சரிவாள், பட்டாகத்தி போன்ற பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றினர். ஆயுதங்களையுடன் சேர்த்து காரையும் பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த கார் சேற்றில் சிக்கியதால் கடத்தல்காரர்கள் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து செம்மரக்கட்டைகளை மாற்று வண்டியில் ஏற்றி தப்பிச் சென்று இருக்கலாம். இல்லையென்றால் கடத்தல்காரர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் எற்பட்டு அந்த காரை அங்கு விட்டு சென்றிருக்கலாம்" எனக் கூறினர். அதன்பின் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை