காட்பாடி ரயில் நிலையத்தில் இன்று (நவ.11) தெற்கு ரயில்வே பாதுகாப்புப்படை ஐஜி பிரேந்தர் குமார், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தபின், ரயில்வே பாதுகாப்புப்படை காவலர்களின் குறை கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம், ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூறிய அவர், ” ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் கரோனா குறித்த விழிப்புணர்வோடு, முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அவற்றை கண்காணிக்க ஒவ்வொரு ரயிலிலும் ஆர்பிஎஃப் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ரயில்வே துறையில் பாதுகாப்புக்காகவே 75 துணை ஆய்வாளர்கள் மற்றும் 600 காவலர்களை தேர்வு செய்துள்ளோம். பெரும்பாலான காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ரயில் பயணிகள் சார்ந்த குற்றங்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்த இக்காவலர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். ரயில்வே துறையின் உடைமைகளை பாதுகாப்பது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபடும் சில கும்பல்களை அடையாளம் கண்டுள்ளோம் “ என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை!