திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மாகாளிக்குடியைச் சேர்ந்தவர் தங்கமணி(33). இவர் சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே தேங்காய், பழக்கடை நடத்திவருகிறார். தற்போது கோயில் திறக்கப்படாமல் உள்ளதால் கடை மூடப்பட்டுள்ளது. மாகாளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(23). இவர் அதே பகுதியில் கடை வைக்கப்போவதாக கூறி அடிக்கடி தங்கமணியிடம் போதையில் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று(ஜூலை23) இரவு விக்னேஷ் போதையில் தங்கமணியின் தேங்காய் பழக்கடையை சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தங்கமணி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார். அப்போது காவல் நிலையம் எதிரே தங்கமணியை, விக்னேஷ் வழிமறித்து மீண்டும் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தங்கமணி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் அங்கேயே சுருண்டு விழுந்தார். தகவலறிந்த சமயபுரம் காவல் துறையினர் விரைந்து வந்து விக்னேஷை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விக்னேஷ் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சமயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமயபுரம் காவல் நிலையம் எதிரே இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.