திருச்சி: “தீரர்கோட்டமாம் திருச்சியிலே” , இப்படித்தான் திருச்சிக்கு வரும் அரசியல்வாதிகள் முழங்குவார்கள். முதன்முதலாக கருணாநிதி நின்றதும் இதே திருச்சியில்தான். மலர் மன்னன், கிளியநல்லூர் நடராஜன், பேரூர் தர்மலிங்கம், செல்வராஜ், ஷேக் முகமது வெல்லமண்டி சோமு, டாக்டர் ரொக்கையா இப்படி திமுகவில் இருந்து மதிமுக தொடங்கப்பட்ட நாள் முதல் நெஞ்சை நிமிர்த்தி வலம் வந்த மதிமுகவினர் சற்றே சோகமாகத்தான் தற்போது வலம் வருகிறார்கள்.
கடந்தமுறை நடந்த மாநகராட்சி தேர்தலில் நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்த மதிமுகவிற்கு, இம்முறை திமுக கூட்டணியில் இரண்டே இரண்டு இடங்களை மட்டும் வழங்கபட்டுள்ளது. அந்த இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் முப்பதாவது வார்டில் கோலோச்சிய முஸ்தபா, இம்முறை பெண்கள் வார்டாக மாறிவிட்டதால் தனது சகோதரியை களத்தில் இறக்கிவிட்டுள்ளார். மற்றொருவர் மாவட்ட துணைச்செயலாளர் அப்பீஸ் முத்துக்குமார் 5வது வார்டில் போட்டியிடுகிறார்.
முஸ்தபாவின் சகோதரிக்கு சீட் வழங்கியதால் கடுப்பான சிலர், கடந்த 2011 தேர்தலில் மாநகரில் 38,000 வாக்குகள் பெற்று மூன்று கவுன்சிலர்களை வைத்திருந்தோம். இப்போது வெல்லமண்டி சோமு, அமைச்சர் நேருவிடம் சேர்ந்துவிட்டார். ஆகவே இரண்டு சீட்டுக்களைப் பெறவே இவ்வளவு இழுபறி என வட்டாரத்தில் சலசலப்பு ஏற்படுத்துகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமுவிடம் கேட்டபோது, “நாங்கள் மூன்று இடங்கள் கேட்டோம் ஆனால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் 2 தொகுதிகள் என முடிவு எடுத்துவிட்டார்கள். நான் என்ன செய்ய முடியும். பொதுச்செயலாளர் மகன் வருகிறார் அப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்றார்.
இதையும் படிங்க: புத்தகக் கண்காட்சியை நடத்த அனுமதிக்க வேண்டும் - ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை