திருச்சி மாவட்டம் முசிறி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (70), இவரது மனைவி கமலம் (68). முசிறியில் தனியார் லாட்ஜில் இரவுநேர காவல் பணிக்கு ஜெயராமன் சென்ற பிறகு மனைவி கமலம் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த பொருள்களை கலைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருள்கள் எதுவும் கிடைக்காததால் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகையை பறித்து தப்பி ஓடினர்.
இதேபோல் கலிங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (35) புதிய வீடு கட்டி கிரக பிரவேசம் முடிந்து பார்வதிபுரத்தில் முன்பு குடியிருந்த வீட்டிலிருந்து பொருள்களை புதிய வீட்டுக்கு மாற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது அம்மா ராஜேஸ்வரி, அக்கா சுமித்ரா ஆகியோர் புதிய வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் கதவை திறக்க முயன்றுள்ளனர். முடியாமல் போகவே கதவைத் தட்டி உள்ளனர்.
குமரவேல் தான் வந்துள்ளார் என நினைத்து கதவைத் திறந்தபோது உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த செயின், வளையல் உள்பட 11 பவுன் நகை களை மிரட்டி பறித்து சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து இருவீட்டாரும் முசிறி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த இடத்தை திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் நேரில் சென்று பார்வையிட்டு டிஎஸ்பி அருள்மணி, இன்ஸ்பெக்டர் விதுன் குமார் ஆகியோரிடம் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க ஆலோசனைகள் கூறினார். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் லில்லி வந்து வரவழைக்கப்பட்டது.
முசிறி அருகே பேரூர் கிராமத்தில் ராணுவ வீரரின் மனைவியிடம் நடந்த செயின் பறிப்பு சம்பவம், முசிறி காவல் உட்கோட்டத்தில் தொடர் செயின் பறிப்புகள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: செய்யாத வேலையை செய்ததாக கணக்கு காட்டி 10 லட்சம் மோசடி - காவல்துறையினர் விசாரணை