திருச்சியில் சமூகநலத்துறைச் சார்பில் நடந்த விழாவில் 500 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவி போன்றவற்றை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.
சமூக நலத்துறைச் சார்பில் திருச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த விழாவில் 500 பேருக்கு தாலிக்குத் தங்கமும், திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டது. அதேபோல் திருநங்கைகள் 42 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டன. இதில் இரண்டு பேருக்கு அடையாள அட்டையை அமைச்சர்கள் வழங்கினர்.
அதேபோல் 'பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம்' என்ற திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு, உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு கையேடு சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. இன்று நடந்த விழாவில் 10 மாணவிகளுக்கு இந்த கையேடு வழங்கப்பட்டது.
2019-20ஆம் நிதியாண்டில் 4,500 பேருக்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி போன்றவற்றை வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைப்போல திருநங்கைகளுக்கான அடையாள அட்டையும், பெண் குழந்தைகளுக்கான கையேடும் அடுத்த இரண்டு நாட்களில் வழங்கப்படும் என்று திருச்சி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப்பின் அடுத்த அதிரடி - வாயைப் பிளந்த பயனாளர்கள்!