திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த முகவனூர் ஊராட்சிக்குட்பட்டது சின்ன அணைக்கரப்பட்டி. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இவர்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்ட நிலையில், அது தற்போது முற்றிலும் ஆபத்தான நிலையில் கான்கிரீட்கள் பெயர்ந்து, கம்பிகள் துருப்பிடித்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது.
இதனால் அவ்வழியே சாலையில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்றுவருகின்றனர். இது குறித்து கடந்த நான்கு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டு குறித்து அலுவலர்களிடம் கேட்டபோது, பழுதான தொட்டியை இன்னும் இரண்டொரு நாட்களில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் வரை சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் உறுதியளித்தனர்.