திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் உப்பாறு உள்ளது. துறையூர், பச்சமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பெய்யும் மழை நீர் உப்பாறாக உருவாகி மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள எதுமலை, தேவிமங்கலம், இருங்களூர், லால்குடி, பூவாளூர் வழியாக சென்று நத்தம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கலந்து வீணாகிறது.
இதனைத் தடுக்கும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியில் 2014ஆம் ஆண்டில் அப்போதைய மண்ணச்சநல்லூர் எம்எல்ஏவும், அப்போதைய அமைச்சருமான டி.பி. பூனாட்சி முயற்சியால் ரூ. 3.25 கோடி செலவில் மழைநீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் தடுப்பணை கட்டி உப்பாற்றின் கரைகளை உயர்த்தினர். அதன் பிறகு, இந்த தடுப்பணை பகுதியில் முள் செடிகள் முளைத்து மரங்களாக வளர்ந்து இருப்பது ஆட்சியில் இருந்த அதிமுக அரசும், 2016-க்கு பின் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியும் கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனை அறிந்த, தற்போதைய மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவன் முயற்சியால் தமிழ்நாடு அரசின் நீர்வழித்துறை சார்பில் ரூபாய் 25 லட்சம் செலவில் இருங்களூர் பகுதியில் உள்ள உப்பாறு தடுப்பணை மேல்புறம் மற்றும் கீழ்ப்புறத்தில் காடு போல வளர்ந்த முள் மரங்கள் உள்ளிட்ட புதர்கள் அகற்றப்பட உள்ளன. இது நீர் செல்லும் திறனை மீட்டெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன், உப்பாறு தூர்வாரும் பணியினை இன்று கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
நீர்வழித்துறை உதவி செயற்பொறியாளர், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், விவசாயிகள், கிராமப் பொதுமக்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.