திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை செயல்பட்டு வருகிறது. இப்பணிமனையில் வெளிமாநில தொழிலாளர்கள் 300 பேர் திடீரென பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இங்கு ஏற்கனவே வெளிமாநில தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதைக் கண்டிக்கும் வகையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவர் மணியரசன் தலைமையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், இன்று வெளிமாநிலத் தொழிலாளர்களை மறித்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இப்போராட்டத்திற்குப் பல அமைப்புகளும் கலந்து கொள்ள மணியரசன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை பொன்மலை ரயில்வேப் பணிமனை முன்பு ஆயிரக்கணக்கானோர் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது பே. மணியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். திருச்சி பொன்மலை ரயில்வேப் பணிமனையில் பணியாற்றும் 3,000 பேரில் 2000க்கும் மேற்பட்டோர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை வெளியேற்றி விட்டு 10 விழுக்காடு வெளி மாநிலத்தவரை மட்டுமே பணியமர்த்த அனுமதி வழங்க வேண்டும். வெளிமாநில தொழில் பயிற்றுநர்களையும் வெளியேற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.