திருச்சி: மணப்பாறையை சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு தமிழ் ஆசிரியையாகப் பணிபுரியும் மகபூபா மாணவிகளிடம் பாலியல் ரீதியாக மிகவும் ஆபாசமாக பேசியதாகக் கூறி 10ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் தங்களது கைகளை கத்தியால், கீறிட்டுக் கொண்டனர்.
இதனைப் பார்த்து பதறிய மாணவிகளின் பெற்றோர், நேற்று( ஆகஸ்ட் 3) காலை பள்ளியை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பள்ளி வளாகத்தில் பெரும்பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை மாவட்ட கல்வி அலுவலர் செல்வி, காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் மற்றும் துணை வட்டாட்சியர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் விசாரணை செய்தனர்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் செல்வி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், 'மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய தமிழ் ஆசிரியை மகபூபா, உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்அலுவலர்களுக்கு பரிந்துரை செய்ய இருக்கிறேன்’ எனத் தெரிவித்தார். இதனையடுத்து மாணவிகளுக்காக 5 மணி நேரமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இவ்வாறு பள்ளி மாணவிகளை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக ஆசிரியை மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மாணவியிடம் முதியவர் சில்மிஷம்;உறவினர்கள் தட்டிக்கேட்டதில் உயிரிழப்பு - 3 பேர் கைது!