திருச்சி: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முப்பெரும் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், "எல்லா மதத்தினரும் படிக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். தற்போது மாணவிகளின் எண்ணிக்கைதான் அதிகம். முன்பெல்லாம் அப்படிப் பார்க்க முடியாது. பெரியார், அண்ணா, கலைஞரால்தான் இந்த அளவுக்கு பெண் கல்வி வளர்ந்திருக்கிறது.
இங்கு நீங்கள் ஹிஜாப் அணிந்துள்ளீர்கள். கர்நாடகாவில் இதுபோல சுதந்திரமாக இருக்கக்கூடாது என பாஜகவினர் தடுத்தனர். புதிய கல்விக்கொள்கையின்படி 3,5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்துள்ளனர்.
அப்போதெல்லாம் இப்படி தேர்வு வைத்திருந்தால், அமைச்சர் நேரு படித்திருக்கமாட்டார். இந்த பொதுத்தேர்வுகளால் இடைநிற்றல் அதிகமாகும். புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
மாநில கல்விக் கொள்கைக்கு மாணவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் போராட வேண்டி வந்தால் போராட வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'நான் முதல்வன்' திட்டம் என்னுடைய கனவு திட்டம்: மு.க.ஸ்டாலின்