தூக்கு மேடையில் ஏறுவதற்கு முன் மாவீரன் பகத்சிங் விரும்பியது ஒரு புத்தக வாசிப்பைதான். காலை முதல் ஆளாக உள்ளே நுழைந்து, இரவு கடைசி ஆளாக அண்ணல் அம்பேத்கர் வெளியே வந்தது, ஒரு நூலகத்திலிருந்துதான். அந்தளவிற்கு நூல் வாசிப்பும், நூலகமும் நமக்கு வழிகாட்டியவர்களுக்கு வழியை காட்டியிருக்கிறது. டிஜிட்டல் யுகம் என்று கூறப்படும் இன்றைய நாட்களிலும் அதன் தேவை இன்னும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
கடந்த பத்து மாதங்களாக கரோனா பரவலால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு தம் கல்வி சம்பந்தப்பட்ட நூல்களைக்கூட தொடர்ந்து வாசிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்களின் வாசிப்புக்கு எந்த வகையிலும் தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணிய, திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலரான மருதநாயகம், சுமார் 80 ஊர்களில் வீதி நூலகங்களை அமைத்து, பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக பல தரப்பினரிடமிருந்தும் நூல்களை நன்கொடையாக சேகரித்து, ஊருக்கு 50 புத்தகம் வீதம் 4 ஆயிரம் புத்தகங்களை சுழற்சி முறையில் மாணவர்கள் வாசிக்க வீதி நூலகம் அமைத்துள்ளார்.
டிவி, செல்ஃபோன் ஆகியவற்றிலேயே மூழ்கியிருந்த மாணவர்கள், தற்போது நூலகத்துக்கு வந்து ஆர்வமுடன் படிப்பது நம்பிக்கை அளிப்பதாக கூறுகிறார் இனியானூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மேரிமாது ராணி. சிறுகதைகள் முதல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு வரை அனைத்து புத்தகங்களும் இங்குள்ளதால், தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்கின்றனர் மாணவர்கள்.
மாணவர்கள் இருக்கும் இடங்களிலேயே இந்த நூலகங்கள் அமைந்துள்ளதால், சில இடங்களில் வீதி நூலகங்கள், வீதி பள்ளிகளாகவும் செயல்பட்டு வருகின்றன. நூல் என்பது பூட்டப்பட்ட பீரோவில் இருக்கும் பொருளாக இல்லாமல், வீதிகளில் மாணவன் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவையாக அமைய வேண்டும் என்கிற மருதநாயகம் வைப்பது ஒரே ஒரு கோரிக்கைதான். அது, தமிழகம் முழுவதும் இதுபோன்ற வீதி நூலகங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே.
இதையும் படிங்க: மதுரையில் தெப்பத் திருவிழா உற்சவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு