திருச்சி: ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் கௌரி சங்கர் மீது பல்வேறு கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. கௌரி சங்கர் பிரபல ரவுடியான குணா, சுந்தரபாண்டி ஆகியோரின் நெருங்கிய நண்பர் ஆவார்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 26) கௌரி சங்கரை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீங்கள் ஒருவருக்கு பிறந்தநாள் ஆசிர்வாதம் வழங்க வேண்டும், தங்களை எங்கு வந்து சந்திப்பது எனக் கேட்டுள்ளார். அதற்கு கௌரிசங்கர் சமயபுரம் அடுத்து வெங்கங்குடியில் தேங்காய் நார் தொழிற்சாலையில் இருப்பதாக பதிலளித்துள்ளார்.
கொடூரமாக வெட்டி கொலை: இதையடுத்து, தேங்காய்நார் தொழிற்சாலைக்கு சென்ற 7 பேர் கொண்ட கும்பல் கௌரி சங்கருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளது. அந்த கும்பல் ஆசிர்வாதம் வாங்குவது போல் நடித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கௌரி சங்கரை சராமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர், தாங்கள் வைத்திருந்த பூ மாலையை அவர் மீது போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
காவல்துறை விசாரணை: தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் காவல் துறையினர் கௌரிசங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் உடன் விசாரணை மேற்கொண்டார்.
பிண்ணனி என்ன? எடத்தெருவை சேர்ந்த கார்த்திக் பிறந்தநாளுக்கு, ஆசீர்வாதம் வாங்குவதற்காக கிளியநல்லூர் சித்தார்த் உள்ளிட்ட 7 பேர் தேங்காய் நார் தொழிற்சாலைக்கு சென்று கௌரி சங்கரை கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், முழு விசாரணைக்கு பிறகு தான், குற்றவாளி யார், இதில் யாரெல்லாம் தொடர்புடையவர் என்பது தெரியவரும். மேலும், மார்ச் 26 (அதாவது நேற்று) அன்றுதான் பிரபல ரவுடிகளான குணா, முட்டை ரவி, சுந்தரபாண்டி அவர்களின் கூட்டாளியான பிரவீன் கொலை செய்யப்பட்டார். அதே நாளில், இவர்களுடைய நண்பரான கௌரி சங்கரை ஒரு கும்பல் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விருதுநகர் வன்புணர்வு வழக்கு; மடிக்கணினியை பறிமுதல் செய்து சிபிசிஐடி போலீசார் ஆய்வு