துவரங்குறிச்சி அருகே உள்ள கள்ளக்காம்பட்டியில் ஒரு சமூதாய பெண்களைக் குறித்து அவதூறாகப் பேசிய பதிவு வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வரும் நிலையில், பேசிய நபர்களைக் கைது செய்யக் கோரி இன்று காலை சாலை மறியலில் பொது மக்கள் ஈடுபட்டனர். மறியலில் பெண்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவதூறு பரப்பிய நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு சாலையில் கல், மரங்களை வைத்து போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் துவரங்குறிச்சி பகுதியில் வெட்டுக்காடு, அக்கியம்பட்டி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இச்சம்பவம் தொடர்பாகத் தங்கள் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.