தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 62ஆவது குடியரசு தின தடகள போட்டிகள் திருச்சி அருகே தொட்டியத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விளையாட்டுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பங்களிப்புடன் 25 பேர் கொண்ட குழு விளையாட்டு குழு அமைக்கப்படவுள்ளது. தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் குறைந்தபட்சம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
தினமும் மாலை நேரங்களில் அல்லது வாரத்தில் ஒரு நாள் பயிற்சி பெறுவோருக்குக் குழுவாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். 5, 8 ஆகிய வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றுக்குத் தான் பொதுத் தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் மூன்று ஆண்டு விதிவிலக்கு உண்டு” என்று அவர் கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார் என்று ரஜினி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு செங்கோட்டையன் பதில் கூறுகையில், குடிமராமத்து, தடுப்பணைகள் அமைப்பது, 3 லட்சத்து 41 கோடி ரூபாய் தொழில் முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு போன்ற சிறப்பான பணிகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல் ஸ்டாலினும் ஆட்சி போய்விடும், வீழந்துவிடும் என்று கூறினார். சட்டப்பேரவையில் நாங்கள் தற்போது 124 உறுப்பினர்கள் உள்ளோம். எந்த அச்சமும் தேவையில்லை என்று கூறிய அவர் 2011லும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் எனத் தவறுதலாகக் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையிலிருந்தது.