திருச்சி மாவட்டம், மணப்பாறை - விராலிமலை சாலையில் உள்ளது வாகைக்குளம். இப்பகுதியில் பல ஆண்டுகளாக மணப்பாறை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இப்பகுதி சுகாதார சீர்கேட்டிற்குள்ளாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டிவருகின்றனர்.
இது தொடர்பாக, அப்பகுதி பொது மக்கள் நமது ஈடிவி பரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “இப்பகுதியில் பல வருடங்களாக நகராட்சி நிர்வாகத்தினர், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவகம் வைத்திருப்பவர்கள், கோழி கடை வைத்திருப்பவர்கள், அதன் இறைச்சிகளை முறைப்படி அப்புறப்படுத்தாமல் சாலையோரத்தில் உள்ள வாகைக்குளம் பகுதியிலேயேக் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை இரவு நேரங்களில் நகராட்சி ஊழியர்கள் தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் ஏற்படும் புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இப்பகுதியானது, மக்கள் வசிப்பதற்கு தகுதியற்றதாக மாறிவருகிறது.
அதன் சாக்கடை கழிவானது, நீர் குளத்து பகுதியில் தேங்குவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தால், இந்த குளம் வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் வருவதால் தாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று மறுத்து விடுகின்றனர். வருவாய் துறையினரிடம் கூறினால் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டுவதால், இதில் நாங்கள் ஏதும் செய்ய முடியாது என்று வருவாய் துறையினர் மழுப்பி விடுகின்றனர்.
இன்று(டிச.31)முதலமைச்சர் மணப்பாறைக்கு பரப்புரை பயணம் மேற்கொள்ள வருகிறார். அவர் செல்லும் சாலை பகுதிகளை மட்டும் சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்திருக்கும் நகராட்சி நிர்வாகம் இந்தப் பகுதியை கண்டுகொள்ளாததால் சாலை மறியலில் ஈடுபடுவோம்” என அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க : பாஜக கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் - முத்தரசன்