கரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களின் இயக்கங்கள் நிறுத்தப்பட்டடிருந்தன. இதற்கிடையில் ”வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் இந்தியாவில் சிக்கி தவித்த வெளிநாட்டினரை அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நோக்கத்துடனும், அதேபோல் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை நம் நாட்டிற்கு அழைத்து வரும் நோக்கத்துடனும் ”வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு தேவைக்கு ஏற்ப விமானங்கள் இயக்கப்பட்டன.
இதன் பின்னர் கடந்த மே மாத இறுதியில் உள்ளூர் விமானங்களை அதிகாரப்பூர்வமாக இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த வகையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு உள்ளூர் விமான சேவை இயங்கிவருகிறது. சர்வதேச விமானங்களும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தினமும் சிங்கப்பூருக்கும், தேவைக்கு ஏற்ப மலேசியா, துபாய், ஷார்ஜாவுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த விமானங்களை நிறுத்தியிருந்தால் கரோனா பரவலை தடுத்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக எழுந்தது. இந்த சூழ்நிலையில் கரோனா தாக்கம் முற்றிலும் நீங்குவதற்குள் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்கள், விமானங்களில் எவ்வாறு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறது என்பது குறித்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் முழு அளவிலான கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது.
விமானத்தில் பயணம் செய்ய விமானநிலையம் வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு முதல்கட்டமாக நுழைவு வாயிலிலேயே கடும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நுழைவு வாயிலிலேயே பயணிகள் கொண்டு வரும் உடமைகளில் முற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பயணிகளின் உடல் வெப்ப நிலை கண்டறியப்படுகிறது. இதில் காய்ச்சல் இல்லை என்று உறுதி செய்த பின்னர் அவருக்கு கை கழுவும் திரவம் வழங்கப்படுகிறது. இதன் பின்னர் அவரது அடையாள அட்டை, பாஸ்போர்ட், பயண டிக்கெட் ஆகியவை கண்ணாடியாலான தடுப்பு அறையில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் சோதனை செய்த பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
விமான நிலையத்திற்குள் பாஸ்போர்ட், விசா போன்ற ஆய்வுகள் தகுந்த இடைவெளியுடன் நடைபெறுவதை பயணிகளே உறுதி செய்கின்றனர். இத்தகைய கடுமையான பரிசோதனைகளுக்கு பின்னரே விமான போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
அந்த வகையில் கடந்த மே மோதம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 943 உள்ளூர் பயணிகள் மட்டுமே பயணம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து முதல் கட்ட தளர்வுக்கு பின்னர் ஜூன் மாதம் உள்ளூர் பயணிகள் 5 ஆயிரத்து 975 பேரும், சர்வதேச பயணிகள் 6 ஆயிரத்து 384 பேரும் பயணம் செய்துள்ளனனர். சர்வதேச பயணிகள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஜூலை மாதத்தில் 10 ஆயிரத்து 57 உள்ளூர் பயணிகளும், 11 ஆயிரத்து 136 வெளிநாட்டு பயணிகளும் திருச்சி விமான நிலையத்திலிருந்து பயணம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் 14 ஆயிரத்து 553 வெளிநாட்டு பயணிகளும், 16 ஆயிரத்து 635 உள்ளூர் பயணிகளும் பயணம் செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 20 ஆயிரத்து 642 உள்ளூர் பயணிகளும், 15 ஆயிரத்து 740 உள்ளூர் பயணிகளும் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு விமான நிலையத்திலும், விமானங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகி பின்பற்றப்படுவதுதான் முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக விமானங்களில் முகக்கவசம், ஷீல்டு, கை கழுவும் திரவம் இரண்டு பாக்கெட், கவச உடை ஆகியவையும் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள் பலர் திருச்சிக்கு விமானத்தில் வந்து, இங்கிருந்து சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.