இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வந்த நமது விவசாயிகள், அதிக மகசூல் என்ற மாயையில் சிக்கி ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளை பயன்படுத்தத் தொடங்கினர். விளைவு, ஏராளமான நோய்கள் பயிர்களுக்கு மட்டுமல்லாமல், அதனை உண்ணும் மனிதனுக்கும் வரத் தொடங்கின.
இந்நிலையில், இயற்கை வேளாண்மையை பேணி காக்க இயற்கை சேவையாற்றிவருகிறார் நாகையை அடுத்த செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணையன். வேளாண் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கண்ணையன், பஞ்ச கவ்யம், மீன் அமிலம், பூச்சி விரட்டு போன்ற இடுபொருட்களை இயற்கை முறையில் தயாரித்து சாதனை படைத்துவருகிறார்.
கண்ணையனின் பண்ணையில் இரண்டு மாடுகளைக் கொண்டு பசும்பால், பசுந்தயிர், உள்ளிட்டவைகள் மட்டுமின்றி, பூண்டு, இஞ்சி என அனைத்தையும் சேர்த்து இயற்கை முறையில் உரல் வைத்து இடித்து, பஞ்சகவ்யம், மீன் அமிலம், பூச்சி விரட்டு போன்ற இடுபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இயற்கை முறையில் தயாரிக்கும் பொருட்களை பயிர்களுக்கு பயன்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைப்பதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர் நாகை விவசாயிகள்.
விவசாய நிலத்தில் ரசாயன உரங்களை தொடர்ந்து தெளிப்பதால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, மண்ணின் சத்துக்கள் அழிந்து, அபாயம் ஏற்படுவதாகக் கூறும் கண்ணையன், இயற்கை இடுபொருட்களை பயன்படுத்துவதால் மண்ணோடு சேர்ந்து, விளைவிக்கும் பயிரும் சத்தானதாக மாறும் என்கிறார். இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டுமென்றும், அவர்கள் விரும்பினால் அது குறித்த பயிற்சியை இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்களைக் கொண்டு பப்பாளி, ஊமைத்தான், பீக்காலத்தி போன்ற மூலிகை குணம் நிறைந்த மரங்கள் மற்றும் செடிகளையும் வளர்த்துவருகிறார் இவர். ரசாயனம் நிறைந்த விவசாயத்தை மீண்டும் இயற்கை முறைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று களம் இறங்கியுள்ள கண்ணையனை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: இயற்கை விவசாயம் - 'லாபத்திற்கானது அல்ல லட்சியத்திற்கானது'