தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் (2020- 21) நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக மாவட்ட அளவிலான நவீன முறையில் வெங்காய சாகுபடி கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்த இந்தக் கருத்தரங்கை, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்க மலரை ஆட்சியர் சிவராசு வெளியிட்டார்.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் திருச்சி மாவட்ட இயக்க குழு சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் திருச்சி தோட்டக்கலை துறை துணை இயக்குநர் விமலா வரவேற்றார். திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பரமகுரு, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். காய்கறித் துறை பேராசிரியர், தலைவர் லெட்சுமணன் நவீன முறையில் வெங்காய சாகுபடி குறித்து கருத்துரையாற்றினார்.
வெங்காய சாகுபடியில் பயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சௌந்தரராஜனும், மதியம் நடந்த அமர்வில் வெங்காய சாகுபடியில் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் குறித்து தோட்டக்கலை உதவி பேராசிரியர் குமரனும் கருத்துரை ஆற்றினார்கள். இதைத் தொடர்ந்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி வேளாண் தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருட்கள்) முருகன் நன்றி கூறினார். இந்தக் கருத்தரங்கில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்காய சாகுபடி விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.