உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கட்டடம் கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதை கண்டிக்கும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் டிசம்பர் 6ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இதனிடையே பாபர் மசூதி தொடர்பான உச்ச நீதிமன்றதின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் எஸ்டிபிஐ, தமுமுக உள்ளிட்ட கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா சந்திப்பு அருகே எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் நியமத்துல்லா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மேலபுலிவார்டு ரோடு இப்ராஹிம் பூங்கா அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரு இடங்களிலும் அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதே போன்று பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்டிபிஐ, தமுமுகவினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டு பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டித் தரவேண்டும் என்றும், இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாகக் கூறியும் கையில் பதாகைகள் ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இது தவிர விழுப்புரத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 150 பெண்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் திருப்பூர், ஈரோடு, உதகையிலும் முக்கிய சாலை சந்திப்புகளில் கருஞ்சட்டை அணிந்து போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரியும், மசூதி இடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பாரபட்சமின்றி கைது செய்யக் கோரியும் எஸ்டிபிஜ கட்சியின் சார்பில் மதுரை தெற்குவாசல் பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சுதேசி காட்டன் மில் அருகில் எஸ்டிபிஐ கட்சி புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் பக்ருதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மக்கள் உரிமை கூட்டமைப்பு, மீனவர் விடுதலை வேங்கைகள் உள்ளிட்ட இயக்கத்தினர் கலந்துகொண்டு பாபர் மஸ்ஜித் மீட்பு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.