ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “அதிமுகவும் பாஜகவும் திமுகவை மட்டுமே பிரச்சாரத்தில் விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் ஆட்சியின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்கவில்லை. ஏனெனில் அப்படி எதையும் அவர்கள் செய்யவில்லை. பிரதமர் மோடியும் அவரது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
கருப்புப் பணத்தை மீட்டு 15 லட்சம் ரூபாய் தருவேன் என்றார். இதுவரை 15 ரூபாய் கூட வழங்கவில்லை. அதேபோல் அதிமுகவில் அனைவருக்கும் செல்ஃபோன் வழங்கப்படும் என்றார்கள். பால் லிட்டர் 25 ரூபாய்க்கு விநியோகிப்போம் என்றார்கள். இதுபோல் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், ஒன்றையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பதவிச் சண்டை தான் நடந்து வருகிறது. அவர்கள் கோஷ்டி சண்டையில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். மக்களை அவர்கள் மறந்து விட்டார்கள். அதனால் மக்களும் அவர்களை மறந்து விடவேண்டும்.
திமுக ஆட்சி அமைந்தவுடன், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும். திருச்சியில் உயர்தர சிறப்பு மருத்துவமனை, மோனோ ரயில், மலைக்கோட்டைக்கு கேபிள் கார் போன்றவைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அதேபோல் ஆட்சி அமைந்த முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும். விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இதில், திருச்சி மேற்கு வேட்பாளர் கே.என்.நேரு, திருச்சி கிழக்கு வேட்பாளர் இனிகோ இருதயராஜ், ஸ்ரீரங்கம் வேட்பாளர் பழனியாண்டி, திருவெறும்பூர் வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி வேட்பாளர் சௌந்தரபாண்டியன், துறையூர் வேட்பாளர் ஸ்டாலின் குமார், மண்ணச்சநல்லூர் வேட்பாளர் கதிரவன், முசிறி வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன், மணப்பாறை வேட்பாளர் அப்துல் சமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ’திமுக தேர்தல் அறிக்கையில் பொய்யான தகவல்’ - பெண் மீது வழக்கு