கரோனா வைரஸ் தாக்குதல் உலகையே உலுக்கி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இவற்றின் விளைவாக வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தமிழ்நாட்டில் ஆங்காங்கே சிக்கி உணவின்றி தவித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் பூங்குடி கிராமத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 60 வடமாநில தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வளையல் வியாபாரம் செய்வதற்காக பூங்குடி கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். அங்கு தங்கி தங்களது வியாபாரத்தை செய்து வந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களது வியாபாரம் பெரிதளவில் பாதித்துள்ளது.
இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் பாஜக சார்பில் ’மோடி கிச்சன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் திருச்சி மணிகண்டம் அருகே உள்ள இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ஆதித சர்க்காரம் அமைப்புடன் இணைந்து தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு சமையல் செய்து ஏழை, எளிய மக்களுக்கு காலை, நண்பகல் ஆகிய இரு வேளைகளில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, பார்வை இழந்தோர் பள்ளி, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி ஆகிய பகுதிகளில் இந்த இரு வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு கட்டமாக பூங்குடி கிராமத்தில் சிக்கியுள்ள வடமாநில தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இன்று பாஜக மாவட்டத் துணைத் தலைவர் அழகேசன், மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் சேது அரவிந்த், பொறியியல் கல்லூரி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினர்.