திருச்சி: மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளான ஊத்துக்குளி, ஊனையூர், தேனூர், பாலக்குறிச்சி, அயன்பொருவாய், வளநாடு உள்ளிட்ட 95 கிராமங்களில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் (திமுக கூட்டணி) ப. அப்துல்சமது தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய அப்துல்சமதுக்கு, பொதுமக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் அயன்பொருவாய் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் அப்துல்சமது வழிபாடுசெய்தார். அங்கு தனது நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு பொதுமக்களிடம் பேசியபோது:
"எடப்பாடி அரசு வெறும் ஆயிரம் ரூபாய் கொடுத்து கரோனா காலத்தில் மக்களை வஞ்சித்துவிட்டது. ஆனால் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நான்காயிரம் தருவோம் எனக் கூறிய ஸ்டாலின், ஜூன் 3ஆம் தேதி அவரது ஆட்சிக் காலத்தில் தருவேன்.
அதைக் கொண்டுவந்து அளிக்கும் வகையில் என்னை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுசெய்ய வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுசெய்யும் நிலையில், நான் மணப்பாறையிலேயே தங்கி மக்கள் பணிசெய்வேன். அதற்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என பரப்புரை மேற்கோண்டார்.
மணப்பாறையில் கலை அறிவியல் கல்லூரி அமையவும், காவிரி நதி நீரை பொன்னணியாறு – கண்ணூத்து அணைப் பகுதிகளுக்கு கொண்டுவரவும் உழைப்பேன் எனவும் வாக்குறுதியளித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு