திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (மார்ச் 26) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "செங்கல்பட்டில் பேருந்தில் பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரம் தொடர்பாக தனியார் அமைப்பின் வாயிலாக அவர்களுக்கு மனநல ஆலோசனை கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
மாநகராட்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகளின் தரம் உயர்த்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் முதல்கட்டமாக 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிகட்டில் தொங்கிக் கொண்டு வருவதற்கு அனுமதி அளித்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே கூறி உள்ளோம். திருச்சி பீம்நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு 6.89 கோடி ரூபாய் செலவில் பள்ளி கட்டடம் மற்றும் கூடுதல் வசதிகள் உருவாக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவர்களிடம் தலைத்தூக்கும் வன்முறை - குழு அமைக்க வலியுறுத்தும் ஆசிரியர்கள்