கரோனா இரண்டாவது அலை தாக்குதல் காரணமாக பாதிப்பவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவ உபகரணங்களை பல்வேறு சமூக அமைப்புகள் இலவசமாக வழங்கி வருகின்றன.
இந்நிலையில், திருச்சி சோழா ரோட்டரி கிளப் சார்பில் தாலுக்கா அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த மருத்துவ உபகரணங்களை ஒப்படைக்கும் விழா இன்று திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விழாவில் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் லட்சுமியிடம் ஒப்படைத்தார். 75 ஆக்சிஜன் கணக்கிடும் கருவி, 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவை ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி சோழா ரோட்டரி கிளப் தலைவர் ஜோசப் பாக்கியராஜ் தலைமை வகித்தார்.