திருச்சி: கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், "மு.க.ஸ்டாலின் மே மாதம் 11 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்ற உடன் 11.05 மணிக்கு நீங்களே மாட்டுவண்டியை மணல் அள்ளுவதற்கு ஆற்றுக்கு ஓட்டுங்கள். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்கள். தடுத்தால் எனக்கு போன் பண்ணுங்கள், அந்த அதிகாரிகள் இருக்க மாட்டார்கள்" என பேசியது அப்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கொஞ்சம் தாமதமாக இப்பொழுது அந்த நிகழ்வு நடந்திருக்கிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில் இல்லை, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கூகூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அள்ளப்படும் மணல் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மண் சாலை வழியாக உத்தமர்சீலி கொண்டு வரப்படுகிறது. அங்கு செயல்படும் அரசு மணல் விற்பனை நிலையம் மூலம் சில்லறை விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் உத்தமர்சீலி வந்து செல்கின்றன. இதனால் திருவளர்ச்சோலை - கல்லணை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் மாவட்ட பகுதிகளில் இருந்து தஞ்சை மாவட்டத்துக்கு ஜல்லி மற்றும் எம் - சாண்ட் கொண்டு செல்லும் கனரகலாரிகளும் இந்த வழித்தடத்தில் தான் சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு உயிர் சேதமும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது எனக்குற்றம் சாட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
இப்போது அவற்றுடன் மணல் லாரிகளும் சேர்ந்துள்ளதால் நெரிசல் அதிகரித்துள்ளது. குறுகலான சாலையில் அதிகளவில் லாரிகள் வந்து செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். கல்லணைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் அடிக்கடி சாலையும் சேதமடைவதாகவும் புகாரும் எழுந்துள்ளது. மேலும் இந்த சாலையில் கனரக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுவதோடு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாய தொழிலும் நசிந்துவிடும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள், வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்வது நியாயமா எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கெளத்தரசநல்லூர், கிளிக்கூடு ஆகிய கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க உத்தரவு!