தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெட்டுக்கோட்டை ஊரணிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (47). நகைக்கடை அதிபரான இவருக்கு செல்லம் என்ற மனைவியும் நிகில், முகில் என இரண்டு மகன்களும் இருந்தனர். இதில் மூத்த மகன் நிகில் சற்று மனநிலை பாதித்தவர் எனக் கூறப்படுகிறது. இதனிடையே குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்வதாக அருகில் இருந்தவரிடம் கூறிவிட்டு நேற்று முன்தினம் புறப்பட்டு நான்கு பேரும் திருச்சி வந்தனர்.
பின்னர் அவர்கள் திருச்சி மேலபுலிவார்டு ரோடு தேவர்ஹால் எதிரே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு செல்வராஜ் தங்கியிருந்த அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து விடுதி ஊழியர்கள் ஓடிச்சென்று கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது அறையிலிருந்த நான்கு பேரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்தனர்.
அவர்களில் செல்வராஜ் மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். மற்ற மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். உடனடியாகச் செல்வராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். தகவலறிந்த திருச்சி கோட்டை காவல் துறையினர் செல்லம், நிகில், முகில் ஆகியோரது உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் அறையிலிருந்து செல்வராஜ் எழுதிய கடிதம் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் தங்களின் மூத்த மகனுக்கு மனநிலை சரியில்லாததால் குடும்பத்தினர் மன அழுத்தத்தில் இருந்ததாலும் நகைக்கடையில் கடன் இருந்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் மனைவி, இரண்டு மகன்களைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த செல்வராஜ் பின்னர் தானும் அதே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் இச்சம்பவத்திற்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த தூப்பாக்கிகள் - ஒருவர் கைது!