திருச்சி: குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோரின் உருவப்படங்கள் இருந்த அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒன்றிய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் குடியரசு தினமான இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம், ராணி வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி, பாரதியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் உருவப்படங்களுடன் ரத ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
அந்த ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு நிராகரித்த அலங்கார ஊர்திகள்