அதிமுகவில் முன்னாள் எம்பி உள்பட 30 பேர் மேயர் பதவிக்கு விருப்ப மனு அளித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையமும் தமிழ்நாடு அரசும் ஈடுபட்டுவருகின்றன. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டன.
அந்த வகையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது தொண்டர்களிடமிருந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுவருகின்றன. மாவட்ட வாரியாக விருப்ப மனு பெறும் நிகழ்வு கடந்த இரு தினங்களாக நடந்துவருகிறது. அந்த வகையில் திருச்சியில் திமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட பிரிவு சார்பில் காஜாமலை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். உணவக விடுதியில் விருப்ப மனு பெறப்பட்டுவருகிறது. மாநகர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் விருப்பமனு பெறப்பட்டுவருகிறது. இந்த வகையில் திருச்சி மாநகரில் மேயர் பதவி இந்தமுறை பொதுத்தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் போட்டியிட அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவகர் உள்பட 30 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இதேபோல் அதிமுக புறநகர் மாவட்ட சார்பில் கொள்ளிடம் நம்பர் ஒன் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள சீனிவாசா மண்டபத்தில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேலு தலைமையில் நேற்று முதல் விருப்ப மனு பெறப்பட்டுவருகிறது. ஏராளமான கட்சியினர் விருப்பு மனு அளித்துவருகின்றனர். விருப்பமனு பெறுவது இன்றுடன் முடிவடைகிறது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு நிகழ்ச்சி: விறுவிறு அதிமுக!