திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் ஊராட்சியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தண்ணீர் பிரச்னை குறித்து ஊராட்சி மன்றத் தலைவி வானதியிடம், பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவி வானதி நேரில் வந்து தண்ணீர் கிடைக்கும் என உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி, தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்றத்தலைவி வானதியின் கணவர் சுரேஷ்குமார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தலைவிக்கு பதில் அவரது கணவர் வந்ததால் ஆத்திரமடைந்த மக்கள், தங்கள் கோரிக்கைகள் குறித்து, சுரேஷ்குமாரிடம் ஆவேசமாகப் பேசினர். இதனையடுத்து அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டம்: துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை