தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வரும் சூழ்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தையும், திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தையும் கரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையடுத்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து, கலைஞர் அறிவாலயத்தை கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கான மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்வதற்கான கடிதத்தை வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட ஆட்சியர், தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்வதாக உறுதி அளித்தார்.
இது குறித்து கே.என். நேரு கூறுகையில், திமுக அறக்கட்டளை சார்பில் கலைஞர் அறிவாலயத்தை கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்வதற்கான கடிதத்தை தலைவர் ஸ்டாலின் ஆலோசனையின்படி தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்வந்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என்றார்.
இதையும் படிக்க: கரோனா தொற்று: பிரதமரிடம் நிதி கேட்டு நாராயணசாமி கடிதம்