கரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக நேற்று (ஏப். 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள் காலவரையின்றி மூட அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் திருச்சி மாவட்டத்திலுள்ள புளியஞ்சோலை, முக்கொம்பு சுற்றுலா மையங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்றுமுதல் (ஏப். 21) மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என்று வனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரவு நேர ஊரடங்கை மீறியவர்களை எச்சரித்து அனுப்பிய காவல் துறை