அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அமெரிக்கை நாராயணன் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியதாவது, "திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார், அதேபோல் இந்த தேர்தலில் எங்களது அறிக்கைதான் சூப்பர்ஸ்டாராக விளங்குகிறது.
முந்தைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகளில் 100 நாள் வேலை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் நகரங்களை விட கிராமங்கள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்தது. தற்போது பாஜக அரசு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளது. நடைமுறையில் எது சாத்தியமோ அதை மட்டுமே காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோடி ஹிட்லராக மாறிக் கொண்டிருக்கிறார். கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறினார். அதேபோல் அனைவரது வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று கூறினார். இதில் எதையுமே அவர் செய்யவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களின் வெறுப்பை தான் பிரதமர் மோடி சம்பாதித்தார்.
அதனால் எதிர்காலத்தில் வெறுப்பு அரசியல் வேண்டுமா? இல்லை விருப்ப அரசியல் வேண்டுமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் பிரிவினைவாத ஆட்சியை ஒழித்து மத சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஏதோ இந்துக்களுக்கு எதிரான கட்சி போல் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் கட்சியின் நிலைப்பாடு அது கிடையாது. நாங்களும் ஆன்மிகவாதிகள் தான்" என்று அவர் கூறினார்.