பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது வன்மத்தை ஏற்படுத்தும் வகையில் தனக்கே உரித்தான கலகலப்பான பாணியில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசியிருந்தார்.
நெல்லை கண்ணனின் இந்தப் பேச்சு பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரைக் கைதுசெய்ய வேண்டும் என பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை கண்ணன் மீது திருநெல்வேலி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காவலர்கள் கைதுசெய்தனர். தற்போது அவர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நெல்லை கண்ணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் எனப் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பேருந்து நிலையத்திலிருந்து மன்னர் கல்லூரி வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது நெல்லை கண்ணனுக்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் எஸ்பி அலுவலகத்தில் நெல்லை கண்ணனுக்கு எதிராகப் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் நெல்லை கண்ணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதையும் படிங்க: நெல்லை கண்ணனை விடுதலை செய்... குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறு! தொடரும் போராட்டம்