திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அதன் துணை வேந்தர் செல்வம் நேற்று (ஏப்.10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கும் தேர்வு கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதற்கு மாணவர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.
இதன்காரணமாக உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் கட்டணங்களை செலுத்தியே மாணவர்கள் தேர்வெழுதலாம். மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கல்வித்துறை செயலாளரின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஒரு தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.125ஆகவும், முதுநிலை மாணவர்களுக்கு ரூ.150-லிருந்து ரூ.250ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், இன்னபிற சான்றிதழுக்கும் அதற்கெற்றார் போல் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றே கட்டணங்களை உயர்த்தினோம். அடுத்த பருவ தேர்வுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுப்போம்" என்றார்.
இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சி குறித்து உலகம் முழுவதும் ஆய்வு நடக்கிறது - கி.வீரமணி