திருச்சி: குண்டூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி. தடகள வீராங்கனையான இவர் தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்றுப் பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள இவர் தகுதி பெற்றார். இதையடுத்து கடந்த மாதம் இவர் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்காக டோக்கியோ புறப்பட்டுச் சென்றார்.
சகோதரி உயிரிழப்பு
இவரது தந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டார். தாய் பராமரிப்பில் வளர்ந்த தனலட்சுமிக்கு உடன்பிறந்த சகோதரிகள் இரண்டு பேர் இருந்தனர். இதில் ஒரு சகோதரி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தனலட்சுமி ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது ஜூலை 12ஆம் தேதி அவரது மற்றொரு சகோதரியான காயத்ரி வீட்டில் கழிப்பிடத்தில் வழுக்கி விழுந்ததில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.
காயத்ரி இறந்த தகவல் தனலட்சுமிக்குத் தெரிவிக்கவில்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றதால் அவரது கவனம் சிதறி விடக்கூடாது என்பதால் குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்தனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தனலட்சுமி நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 07) விமானம் மூலம் திருச்சி வந்தார்.
கதறி அழுத வீராங்கனை
திருச்சியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தனலட்சுமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை விமான நிலைய நுழைவு வாயில் வரை வரவேற்று அழைத்து வந்தனர். அப்போது அவர் காரில் ஏறும்போது சகோதரி காயத்ரி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அங்கேயே கதறி அழுதார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தனலட்சுமியைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். சகோதரி இறப்பு காரணமாக விமான நிலையத்தில் தடகள வீராங்கனை அழுத சம்பவம் பலரையும் கவலையடையச் செய்தது.
இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக்தான் அடுத்த இலக்கு- பி.வி. சிந்து