திருச்சி: மணப்பாறை அடுத்த எலமணம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் மனைவி கண்ணகி உள்ளூர் அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச. 3) அங்கன்வாடி மைய ஆய்வுக்குச் சென்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாகிதா ரிஸ்வானா அங்கு பணியிலிருந்த அங்கன்வாடி அமைப்பாளர் கண்ணகியிடம், அங்கன்வாடி இதில் மேற்கொண்டு வரும் வரவு செலவுகள் குறித்து தகவல்களைக் கேட்டு ஆய்வு செய்துள்ளார்.
அப்போது கிராம சுகாதார ஆய்வுக் கூட்டம் குறித்த பதிவேட்டைக் காண்பிக்கும்படி கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த, கண்ணகி தற்போது பதிவேடு தன்னிடம் இல்லை என்றும், திங்கட்கிழமை அதுகுறித்த பதிவேட்டைத் திருச்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார்.
அதை ஏற்க மறுத்த திட்ட அலுவலர் அமைப்பாளர் கண்ணகியிடம் நான் நினைத்தால் நீ ஒழுங்காக வேலை செய்யவில்லை என குறிப்பானை (மெமோ) கொடுத்து பதவி உயர்வு கிடைக்காமல் செய்து விடுவேன் என மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.
இதனால் பணியிடத்திலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் கண்ணகியின் கணவருக்குத் தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கணவர் தனபால் கண்ணகியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் அதிக பாதிப்புக்குள்ளானதாகக் கூறியதையடுத்து, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து கண்ணகி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கன்வாடி பணியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவு நாள்: நினைவிடத்தில் மரியாதை செலுத்திய இபிஎஸ், ஓபிஎஸ்