திருவாரூர் மாவட்டம் புதுக்குடியை அடுத்த நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (52). இவரது மனைவி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். முதுநிலை பட்டதாரியான கோபால கிருஷ்ணன் பெங்களூர் மற்றும் மதுரையில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்தபோது, தேசிய நெடுஞ்சாலையில் அடிப்பட்ட ஒரு நாய்க்கு மருத்துவ சிகிச்சையளித்து வீட்டில் வளர்த்து வந்துள்ளார் கோபால கிருஷ்ணன். பிறகு தெருவில் அடிபட்டுத் திரியும் நாய்களை வீட்டிற்கு எடுத்து வந்து சிகிச்சை அளித்ததோடு அவற்றை வளர்க்கவும் தொடங்கினார். இது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தவே, ஒருக்கட்டத்தில் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
அங்கு வந்த பின்னர், கோயிலுக்கு நேர்ந்து விடும் ஆடுகள், அடிபட்ட ஆடுகளை மீட்டு வளர்க்க தொடங்கியுள்ளார். கணவரின் இந்தத் தொடர் செயல்பாடுகள் பிடிக்காத அவரது மனைவி, தனது மகள்களுடன் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இருப்பினும் ஆதரவற்ற விலங்கினத்தின் மீதான இவரது பரிவு, ஓரிரு ஆடு வளர்ப்பில் தொடங்கி தற்போது 60 ஆடுகளுக்கு மேலாக பெருகி நிற்கிறது. மேலும் 20 தெரு நாய்கள், 25க்கும் மேற்பட்ட பூனைகளையும் வளர்த்து வருகிறார்.
இவற்றுக்கு சாக்காலான மெத்தை, கட்டில், மின்விசிறி என சகல வசதிகளுடன் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவைகளும் உணவு வேளைக்கு வீட்டிற்கு வந்து உண்டு, பின்னர் ஒய்யராமாக தூக்கத்தையும் போடுகின்றன மயில், உடும்பு, பறவை வேட்டையாடுதலை தொடர்ந்து தடுத்து வந்துள்ள கோபாலகிருஷ்ணன், தெரு நாய்களை யாரேனும் துன்புறுத்தினால் அவர்கள் மீது தயங்காமல் புகார்களையும் அளித்து வருகிறார். இதன் காரணமாகவே சில எதிர்ப்புகளையும் சேர்த்து வைத்துள்ள இவர், எதையும் கண்டு கொள்ளாமல் காலை முதல் இரவு வரை ஆதரவற்ற பிராணிகளுக்காகவே வாழ்நாளை செலவிட்டு வருகிறார்.
ஆதரவற்ற உயிரினங்களை பாதுகாக்க தன் வீட்டையே அர்ப்பணித்த இந்த விலங்கினப் பாதுகாவலர், நாளுக்கு நாள் அவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தன் வீடு அவைகளுக்கு போதுமானதாக இல்லை என்றும், அரசு இவைகளுக்கு உதவும் வகையில் இடம் அமைத்து, அவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறார்.
இதையும் படிங்க: புலிகள் காப்பகத்தில் மரநாய்க்குட்டி