திருச்சி : திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பூனாம்பாளையம் ஊராட்சியில், அரசு நிலத்தில் 4.26 ஏக்கர் பரப்பளவில் அடர்வனக்காடுகள் (மியாவாக்கி) உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பூவரசு, யூக்கலிப்பட்டஸ், கொய்யா, மருதம், நாவல், நீர் மருது, மலைவேம்பு, வேம்பு உள்ளிட்ட 54 வகையான, 50 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகளை ஒரே இடத்தில் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார்.
காட்டின் சூழலில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், காற்று மாசு குறைந்த தூய்மையான காற்றை சுவாசிக்கவும், இயற்கை சூழலை மீட்டெடுக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த மரம் நடும் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்