பல்லடம் செம்மிபாளையம் பகுதியில், தறி வேலை செய்து வரும் சக்திவேல் என்பவரது மகன் சஞ்சய். இவர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பெரும்பாளி பகுதியிலுள்ள, இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சஞ்சய், பள்ளிச் சீருடையிலேயே வீட்டினுள் உள்ள தன் அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் ஆசிரியை தாக்கியதால் தான், மாணவன் தற்கொலை செய்துகொண்டான் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பாக இப்பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயதே ஆன பள்ளி மாணவனின் மனதில் தற்கொலை எண்ணம் தோன்ற என்ன அழுத்தம் காரணம் என வினவும் ஆர்வலர்கள், மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, சரியான பயிற்சிகள் அளிக்கப்படவேண்டியது அனைத்து பள்ளிகளின் கடமை என்றும் கூறியுள்ளனர்.