திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவரும் இவரது நண்பர் தனபால் ஆகியோரும் இணைந்து அதே பகுதியில் முருகன் டெக்ஸ் என்ற பெயரில் நூற்பாலை நடத்தி வந்தனர். இந்த நூற்பாலையில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் விடுமுறை முடிந்து இன்று காலை தொழிலாளிகள் பணிக்கு திரும்பினர்.
இயந்திரங்களை வழக்கம்போல் இயக்கி பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு இயந்திரத்தில் தீ பிடித்ததால் அதிர்ச்சியடைந்த தொழிலாளிகள் உடனடியாக உரிமையாளர் மனோஜுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பல்லடம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்த தொழிலாளிகள் அருகில் தண்ணீர் தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
அதற்குள் தீ மளமளவென அங்கிருந்த பஞ்சு மூட்டைகள், நூல்கண்டுகள் ஆகியவற்றில் பரவத் தொடங்கியது. இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் நூற்பாலையில் வைத்திருந்த பஞ்சு மூட்டைகள், நூல்கண்டுகள், இயந்திரங்கள் என அனைத்தும் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகின. இது குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
பழைய இரும்பு விற்பனை கடையில் தீ விபத்து - ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு!