சென்னை: டாடா நகர் ரயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட வழித்தடங்களில் தொடர்ந்து சிறப்பு ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாடு வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் ரயில் நிலையத்திலிருந்து 5:15 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை 2.25 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும்.
அதேபோல மறுபுறம், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து காலை 6:50 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை 4:15 மணிக்கு டாடா நகர் ரயில் நிலையத்திற்குச் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜனவரி 28) காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த தொடர்வண்டியில் ஒரு இரண்டாம் தரக் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 4 மூன்றாம் தரக் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 சாதாரண பெட்டிகள் ஆகியவற்றுடன் இந்த சிறப்பு அதிவிரைவு ரயில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ரயில் தமிழ்நாட்டின் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, அவ்வழியாகக் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடையும் என்று தென்னக ரயில்வேவின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.