தமிழ்நாட்டில் திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நெல்லை, விருதுநகர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் 60 விழுக்காடு பங்களிப்புடனும், மாநில அரசின் 40 விழுக்காடு பங்களிப்புடனும் இந்த மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.
அதன்படி திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்திலேயே கட்டப்பட உள்ளது. மொத்தம் உள்ள 27 ஏக்கரில், 17 ஏக்கரில் மருத்துவக் கல்லூரி அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, இதற்காக ரூ. 336.96 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார்.
ஆனால், இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் எந்த ஒரு துறைக்கும் முறையான அறிவிப்பு வரவில்லை என்றும், மருத்துவக் கல்லூரியின் இயக்குநருக்கே நிகழ்ச்சி முடிந்த பின்னரே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது என்றால், அம்மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்.
ஆனால், இன்று மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா என்பது எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல், மாவட்ட நிர்வாகத்திற்கே தெரியாமல் நடத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 336 கோடியில் திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி: முதலமைச்சர் அடிக்கல்!