திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, பாப்பினி ஊராட்சிக்கு உள்பட்ட வரதப்பம்பாளையம் பகுதியில் கடந்த 10 வருடங்களாக கௌதம் பைபர்ஸ் என்னும் தேங்காய் நார் மில் செயல்பட்டு வருகிறது. மனோகரன் என்பவருக்குச் சொந்தமான இந்த மில், 144 தடை உத்தரவால் கடந்த 25ஆம் தேதி முதல் பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை நான்கு மணியளவில் திடீரென இயந்திரங்கள் உள்ள பகுதியில் தீப்பற்றி, அங்கே விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேங்காய் நார் பொருள்கள் மீது தீப்பற்றி, மளமளவென எரியத் தொடங்கி வரதப்பாளையம் கிராமப் பகுதி முழுவமும் கரும் புகைமூட்டம் சூழ்ந்ததால் அச்சமடைந்த கிராம மக்கள் காங்கேயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காங்கேயம் தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கப் போராடினர். பல டன் எடையுள்ள தேங்காய் நார் பொருள்கள் மீது தீப்பற்றி எரிந்ததால் தீயைக் கட்டுப்படுத்த வெள்ளக்கோயில் தீயணைப்புப் படையினரும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கப் போராடினர்.
சுமார் 60க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நார் தயாரிக்கும் இயந்திரங்கள், 30 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தேங்காய் நார் பொருள்கள் உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து காங்கேயம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.