திருப்பூர்: உப்பாறு அணைக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் சட்டியேந்தி போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு, திருமூர்த்தி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட கோரி, உப்பாறு அணை விவசாயிகளின் போராட்டத்தின் 3ஆம் நாளான இன்று, கையில் சட்டியேந்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் கலைச்செழியன் கூறுகையில், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி, விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், பொதுப் பணித்துறை அலுவலர்கள், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர்.
'வேளாண் சட்டம் விவசாயிகளை அவமதிக்கிறது'- ராகுல் காந்தி!
உப்பாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரை பொதுப் பணித்துறை அலுவலர்கள், கையூட்டு பெற்றுக் கொண்டு, தனியார் கோழிப்பண்ணைகள், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு விற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதற்கான ஆதாரங்களை திரட்டி, ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பொதுப் பணித் துறை அலுவலர்கள் மீது, தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர் கலைச்செழியன், முருகானந்தம், சிவகுமார், ரகுபதி உள்பட உப்பாறு அணை பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.