கோவை மாவட்டம் பாப்பம்பட்டி சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் காளிமுத்து-காப்பாத்தாள் தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்துவருகின்றனர். உடல்நிலை சரியில்லாத தங்களைக் கவனித்துக் கொள்ள ஆள்கள் இல்லாததால், தம்பதி இருவருமே சோகத்தில் இருந்துவந்துள்ளனர்.
நேற்று முன்தினம் வீட்டின் அருகில் இருப்பவர்களிடம் மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால் நேற்று மதியம்வரை அவர்கள் வீடு திரும்பவில்லை என அக்கம்பக்கத்தினர் அவர்களது மகள்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அனைவரும் இருவரையும் தேடிவந்த நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் திருப்பூர் மாவட்ட காமநாயக்கன்பாளையம் எல்லைக்குள்பட்ட குள்ளம்பாளையம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் கிடந்துள்ளது.
சடலங்களை மீட்டு காவல் துறையினர் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். கவனித்துக்கொள்ள ஆள்கள் இல்லாததால் வயதான தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.