திருப்பூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இஸ்லாமிய ஜமாத் பெருமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அம்மாவின் அரசு எம்ஜிஆர் காலத்திலிருந்து மத, சாதி அரசியலை முன்னெடுத்தது இல்லை. மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் குறித்து பேசியவர்கள் மீது கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்ட ஒழுங்கில் மூன்றாண்டுகளாக விருது பெற்றுள்ளோம். நாச்சிபாளையத்தில் இஸ்லாமியர்கள் உடல் நல்லடக்கம் செய்வதற்காக இடம் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. மாவட்ட காஜிக்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்பட்டுவருகிறது. நான் மசூதி, சர்ச், கோயில்களுக்கு செல்கிறேன். என் இஸ்லாமிய நண்பர்கள் எப்போதும் எனக்கு சூடான பிரியாணியை வழங்குவர். எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை.
கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கட்சியின் கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதனால், யாரும் கூட்டணி குறித்து தவறான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம். அதிமுக அரசு உங்கள் மன வேதனையை போக்கும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் இந்த அரசு முழு பாதுகாப்பாய் இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க...பிரதமர் தமிழ்நாடு வருகை: பாதுகாப்புப் பணியில் 6,000 காவலர்கள்